Monday 6 September 2010

ஈழத்து நூல்க்கண்காட்சியும் அதன் அசைவுகளும்.

வருடாந்தம் முல்லைஅமுதனால் நடாத்தப்படும் ஈழத்து நூல்க் கண்காட்சியுடன் கூடிய இலக்கியவிழா 2007 கார்த்திகை 10ம் திகதி இல்கேட் புனித லூக்ஸ் தேவாலய மண்டபத்தில் நடைபெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பமாகியது. நூலக அமைப்புடன் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மறைந்த ஈழத்து எழுத்தாளர்களின் புகைப்படங்களும் அழகாக சட்டமிடப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தன.

பின்பு மாலை 7.00 மணியளவில் கவிஞர். கந்தையா இராஜமனோகரன் தலைமையில் இலக்கியவிழா ஆரம்பமானது. மௌன அஞ்சலியுடன் ஆரம்பித்து தொடர்ந்து செல்வி. நிவேக்கா பூபாலசிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்தினை உணர்வோடு பாடினார். தமையுரையைத் தொடர்ந்து அனைவரையும் மெய்மறக்கச்செய்யும் வண்ணம் திரு. ஞானவரதனின் மாணவர்களாகிய செல்வன். திவ்வியன் உமாபதி சர்மா, செல்வன். பவித்திரன் உமாபதி சர்மா ஆகியோரின் புல்லாங்குழல் இசை பக்கவாத்தியங்களுடன் நடைபெற்றது. தொடர்ந்து செல்வி. இராகினிதேவி ஐயாத்துரை அவர்களின் மாணவர்களின் வயலின் இசை இனிமையாக இசையினை பரப்பியது. தொடர்ந்து கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். கரைவைக்கவி, சட்டத்தரணி. சிறீஸ்கந்தராஜா, திரு. ஐ.தி. சம்பந்தன், திரு.ந. செல்வராஜா, திரு.மு.பொன்னம்பலம், திரு. பத்மநாபா ஐயர், கவிஞர். வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அரிதான தேடற்கரிய நூல்களைத் தேடிப்பெற்று வகைப்படுத்திக் காட்சிப்படுத்துவதுடன் அதனை ஆவணக்காப்பகமாகவும் பேணிவருகிறார்.அதனை தங்கள் ஆய்வுகளுக்கும் பயன்படுத்துவதற்கும் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ் ஆவணக்காப்பகத்தை விரைவில் சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதே தன் எதிர்காலக் கனவு என்பதை முல்லைஅமுதன் குறிப்பிட்டார். பலரின் வாழ்த்துதலோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.


சுதர்சனா
லண்டன்
காற்றுவெளி' சஞ்சிகை ஆதரவில் ஈழத்து நூற் கண்காட்சி!
ஈழத்து எழுத்தாளரின் நூற்கண்காட்சியில் ஓர் அறிவியல் அரங்கேற்றம்!

- திருமதி. தனபாக்கியம் குணபாலசிங்கம் (இலண்டன்) -

கவிஞர் முல்லை அமுதனின் காற்றுவெளி சஞ்சிகை ஆதரவில் ‘இலக்கிய விழாவும் ஈழத்து எழுத்தாளர்களின் எட்டாவது
நூற்கண்காட்சியும்’ இலண்டனிலுள்ள இல்பேட் புனித லூக் தேவாலய மண்டபத்தில் 10.11.2007 (சனிக்கிழமை) இடம் பெற்றிருந்தது. இவர்
இத்தகைய நூற்கண்காட்சிகளை 2002ஆம் ஆண்டு முதலாக, இலண்டன் வாழ் தமிழரின் வாசிப்பு அறிவைப் பெருக்கவும் தமிழரின்
பாரம்பரியங்களைப் புரிந்து கொள்ளவும், மற்றும் ஈழத்து எழுத்தாளர்கள் உலகில் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதனை
நிலைநிறுத்தும் வகையிலும் விடாமுயற்சியுடன் இப்பணியிற் தன்னை அர்ப்பணித்து வருகின்றார். இவர் இம்மாபெரும் தொண்டினைச் செய்வதற்காகத் தனது உழைப்பின் அதிக பணத்தைச் செலவளித்து இலங்கை, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, கனடா, மலேசியா,நோர்வே, சிங்கப்பூர் முதலான ஈழத்தவர் வாழும் நாடுகளிலிருந்தெல்லாம் ஈழத்தவர் நூல்களைச் சேகரித்து வருகின்றார்.

ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து நேரடியாக நூல்களைக் கொள்வனவு செய்தும் மற்றும் நாளேடுகள், மாதஇதழ்கள் முதலானவற்றிற்குச்
சந்தாப்பணம் கட்டியும் வாங்கி வருவது, ஒரு பித்தன் மடையன் என்ற பட்டங்களைப் பெறுவதற்கல்ல. இதுவொரு இனப்பற்றுடன் மிகமிகக் கண்ணியமாக முல்லைஅமுதன் பாடுபடும் ஒரு மாபெரும் பணியெனில் மிகையாகாது. குறிப்பாக இவர் தனது வீட்டில்
நிரந்தரமாக மிகப்பழைய காலம் முதல் இன்றுவரை வெளிவந்த பல்லாயிரக்கணக்கான நூல்களையெல்லாம் சேகரித்து வைத்திருப்பதுடன், மற்றோரும் தன் பணியினால் நன்மையடைய வேண்டுமென்று ஈழத்து நூற்கண்காட்சியையும் நடாத்தி; வருவதையிட்டு நாம் அனைவரும் பெருமைப்படவேண்டும்.

இனி, இவர் தன் கண்காட்சியை மாலை 3.00மணியளவில் ஆரம்பித்து பின் 6.00மணியளவில் பேச்சாளர்களின் விமர்சனங்களும்,
தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுமென ஊடகங்கள் மூலமாகவும் நேரடி அழைப்புகள் மூலமாகவும் அழைப்புக்கள்
விடுத்திருந்தார். நான் எனக்குக் கிடைத்த அழைப்பைப் பயன்படுத்தி மூன்று மணியளவில் தேவாலயக் கண்காட்சி மண்டபத்திற்குள்
சென்றிருந்தேன். என்ன ஆச்சரியம்!! அங்கு ஒரு அறிவியற் பெருவிருந்து ஒன்று ஒவ்வொரு ஈழத்துத் தமிழ் மகனுக்கும் காத்திருந்தது. அதாவது நான் கேள்விப்படாத ஈழத்தவர் ஆக்கங்கள் அத்தனையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வரலாறு, சமயஇலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள், அரசியல், பொருளாதாரம், தாயகப்போராட்ட எழுத்துகள்,அழகியல, சஞ்சிகைகள் என அத்தனையும் வகைப்படுத்தப்பட்டு மிக அழகாகக் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான் வாயடைத்து வியப்பில் மூழ்கியிருந்தேன். ஏனெனில் நான் எனக்கு ஆர்வமுள்ள துறையில் மட்டுமே 1962ம் ஆண்டு முதலாக வாங்கிப் படித்து வருவேன். ஆனால் இவரோ எல்லாத்துறை நூல்களையும் தேடித்தேடிப் பெற்றிருந்தமையே என் வியப்பிற்கு காரணமாகும். இவரிடம் உள்ள பல நூல்கள் அதனை எழுதிய எழுத்தாளர்களிடமே (என்னிடமே எனது நூல்களிலொன்று) இல்லை என்பதனையும் அத்தோடு மண்டபத்தில் வைத்திருந்த நூல்களின் தொகை அவரிடமுள்ள நூல்களின் தொகையில் நான்கில் ஒரு பங்கே என்பதனையும் அறிந்த போது என் வியப்பிற்கு அளவேயில்லை. ஏனெனில் ஈழத்தமிழர்கள் எவ்வளவு தூரம் கல்விமான்களாகத் திகழ்கின்றார்கள் என்பதனை உலகத்தமிழருக்கு அறிவுறுத்துவதற்கு மட்டுமல்ல, மட்டக்களப்பு மலைநாடு , யாழ்குடா எனும் பகுதிகளில் இலைமறை காய்கள் போல் மறைந்து வாழ்ந்து வரும் ஈழத்து எழுத்தாளர்களையும் உலக அரங்கில் அரங்கேற்றிக் கௌரவித்து வருபவர் இவர் ஒருவரே எனில் மிகையாகாது. ஆதனினால் இது ஒரு ஈழத்தமிழரின் வரலாற்றைக் கூறும் நூற்கண்காட்சி என்பதும் உறுதி.

இத்தகைய எண்ணங்களை என் மனக்கண்ணோட்டத்தில் விட்டு மகிழ்ந்துகொண்டு இருக்கையில் தொடர்ந்து பெரும் கவலை ஒன்றும்
கவ்விவாட்டத்தொடங்கியது. இவ்வரிய கண்காட்சிக்கும், சிறந்தபேச்சாளர்கள் உரைகளுக்கும், கலைநிகழ்ச்சிகளுக்கும், இரவு உணவிற்கும் வந்திருந்தவர்களின் தொகை ஒரு சினிமாத்தனமான நிகழ்ச்சிக்கும், கேலிக்கூத்துக்கும் கடும்குளிருக்குள்ளும், அலையும் எம்மவர்கள் தொகையினை விடக்குறைவே. இப்படியான அறிவுபூர்வமான நிகழ்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது சிந்திக்கத் தெரியாததால் தானோ தமிழன் அகதியாக அலைந்த படியே இருக்கின்றான்…?

இருப்பினும் மண்டபம் நிறைந்த மக்களுக்குள் இலண்டனுக்கு மிகத் தூரத்திலுள்ளஒக்ஸ்பேட்டிலிருந்து 3.00 மணிக்கே வருகை தந்திருந்த திருமதி. றீற்றா பற்றிமாகரன் அவர்கள் கண்காட்சியைக் கௌரவித்துக் கொண்டு தனக்கு ஆர்வமுள்ள நூல்களை மனமொனறிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டதும், எனக்கு வள்ளுவரின் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற வாக்கினை நினைவு படுத்தியது. மற்றும் சட்டத்தரணி நேமிநாதன், சட்டத்தரணி சிறீஸ்கந்தராஜா,கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். மு.பொன்னம்பலம் திரு.பத்மநாபா ஐயர், பல்கலைக்கழக மாணவர்கள் என பலவகைப்பட்டவர்களையும் காணக்கூடியாதக இருந்தது மனநிறைவைத் தந்தது.

பின்பு மாலை 7.00 மணியளவில் கவிஞர். கந்தையா இராஜமனோகரன் தலைமையில் இலக்கியவிழா ஆரம்பமானது. மௌன
அஞ்சலியுடன் ஆரம்பித்து தொடர்ந்து செல்வி. நிவேக்கா பூபாலசிங்கம் தமிழ்த்தாய் வாழ்த்தினை உணர்வோடு பாடினார். தமையுரையைத்
தொடர்ந்து அனைவரையும் மெய்மறக்கச்செய்யும் வண்ணம் திரு. ஞானவரதனின் மாணவர்களாகிய செல்வன். திவ்வியன் உமாபதி சர்மா, செல்வன். பவித்திரன் உமாபதி சர்மா ஆகியோரின் புல்லாங்குழல் இசை பக்கவாத்தியங்களுடன் நடைபெற்றது. தொடர்ந்து செல்வி. இராகினிதேவி ஐயாத்துரை அவர்களின் மாணவர்களின் வயலின் இசை இனிமையாக இசையினை பரப்பியது.

தொடர்ந்து இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த கவிஞரும் பிரபல எழுத்தாளருமாகிய மு.பொன்னம்பலம் அவர்கள் உரையாற்றினார். அவர் முல்லை அமுதனைப் பாராட்டிப் பேசியதோடு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த ஈழத்து எழுத்தாளரின் திருஉருவப்படங்கள் அழகாக சட்டம் போட்டு வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தமையையும் பாராட்டினார். அதுவும் தமிழீத்தில் மாவீரர் தினத்தை கொண்டாடும் கார்த்திகை மாதத்தில் நாமும் மறைந்த ஈழத்து எழுத்தாளரின் படங்களுக்கு வணக்கம் செலுத்துவது சாலப்பொருத்தமே. தொடர்ந்து கலாநிதி. மு.நித்தியானந்தன், கவிஞர். கரைவைக்கவி, சட்டத்தரணி. சிறீஸ்கந்தராஜா, திரு. ஐ.தி. சம்பந்தன் (ஆசிரியர் சுடரொளி), நூலகவியலாளர் திரு.ந. செல்வராஜா, திரு. பத்மநாபா ஐயர், கவிஞர். வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினார்கள்.

முல்லை அமுதன் வரலாற்றுச் சுவடிகளையும், ஆவணங்களையும் சேகரிக்கும் பணியானது, இன்னும் 1000 வருடங்களுக்குப் பின்னரோ
அல்லது முன்பின்னாக வரும் எம் சந்ததியினருக்கு இவைகள் சென்றடையும் என்பதில் ஐயமில்லை. மண்ணின் கீழ் பாதுகாத்து வைக்கப்பட்ட பானை ஓடுகளே பல நாடுகளின் வரலாற்றினை வெளிச்சத்திற்கு இட்டுச்சென்றுள்ளன. ஈழத்தமிழர் வரலாற்றினைக்
கட்டிக்காக்க முயன்றுகொண்டிருக்கின்ற கவிஞர் முல்லை அமுதனுக்கு எம்மாலான ஒத்துழைப்புகளையும் வழங்கி இந்நூலகத்தை நிரந்தரமாய், அழியாத தமிழ் நூலகமாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோளாகும். இப்பணிக்காக அவர் வாழும் காலத்திலேயே நீடுழிகள் வாழ நன்றியுடன் வாழ்த்துவோமாக.

Sunday 5 September 2010

லண்டனில் ஈழத்து நூல் கண்காட்சி: முல்லை அமுதனுக்குப் புகழாரம்!
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -



லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சியை மிகுந்த அக்கறையுடனும்இ பேருழைப்புடனும் நிகழ்த்திவரும் முல்லை
அமுதனுக்கு லண்டன் வாழ் தமிழர்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தமிழர்கள்;
வெளியிட்ட பன்னிரண்டாயிரத்துக்கும்; மேற்பட்ட நூல்களை புலம்பெயர்ந்துவாழும் நாடுகளிலிருந்தும், இலங்கையின் பல்வேறு
பாகங்களிலும் இருந்தும் முல்லை அமுதன் அரும்பாடுபட்டுத் தேடித் திரட்டி நவம்பர் மாதம் பத்தாம் திகதி ‘இல்போர்ட்’ சென்.லூக்ஸ்
தேவாலய மண்டபத்தில் கண்காட்சிக்கு வைத்திருந்தார். பல்வேறு தலைப்புக்களின் கீழ் நூல்கள் பகுதி பகுதியாக பார்வைக்கு
வைக்கப்பட்டிருந்தன. இலங்கையிலேயே இவ்வளவு பெருந்தொகை நூல்களை ஒரே கண்காட்சியில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகமே!
லண்டன் போன்ற தலைநகரில் இத்தகைய ஒரு பிரமிப்பூட்டும் ஈழத்து நூல்களின் கண்காட்சி இடம்பெறுவது எமக்குக் கிடைத்த
வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்;. அறிவியல், சமயம், வரலாறு, சிறுகதை, கவிதை, நாவல், சமையல், சிறுவர் இலக்கியம்,
விமர்சனம், கட்டுரைகள் ஆகிய பல்வேறு தலைப்புக்களின் கீழ் இலங்கையில் வெளியாகியுள்ள பெருவாரியான நூல்களை பார்க்கும்போது மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் பரவி இருந்ததை உணரமுடிந்தது.

இவ்வளவு பெருந்தொகையான நூல்களை இலங்கையில் இருந்து எழுத்தாளர்களிடமிருந்தும்இ பதிப்பாளர்களிடமிருந்தம் லண்டனுக்குத்
தருவிக்க முல்லை அமுதன் பெரும் கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்பதை வலியுறுத்திச் சொல்ல வேண்டியதில்லை. இதனைவிட சைமன் காசிச் செட்டியில் இருந்து டானியல் அன்ரனிவரை மிக அரிதாகவே கிடைக்கக்கூடிய ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்களின் புகைப்படங்களையும் கண்காட்சிக்கு வைத்திருந்தமை இந்த கண்காட்சிக்கு புதிய மெருகு சேர்த்தது எனலாம். காற்று வெளி சஞ்சிகையின் ஆதரவில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சி முடிவில் நடன நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இக்கண்காட்சி விழாவில் கவிஞர் க.ராஜமனோகரன் தலைமை தாங்கிய இலக்கியக் கூட்;டத்தில் முக்கிய எழுத்தாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும்
உரையாற்றினர்.

கவிஞர் ராஜமனோகரன்: புகலிடத்தில் ஈழத்துத்தமிழ் வெளியீடுகளை ஆவணமாக, எதிர்காலத் தலைமுறையினரும் பயன்படுத்தத் தக்கதாக பொது அமைப்பு ஒன்று செயற்படுதல் அவசியம் என்று கவிஞர் ராஜமனோகரன் வலியுறுத்தினார். லண்டனில் நாற்பதுக்கும் மேற்பட்ட வீடுகளை தமது சொந்த ஆதனத்தில் வைத்திருக்கும் சைவஆலயங்கள் இந்த நூல்களைப் பாதுகாக்கும் ஆவணக் களஞ்சியங்களை செயற் படுத்தத்தக்க வசதியான நிலையில் உள்ளன என்றும், ஆனால் இத்தகைய ஆலயங்கள் சமூக உணர்வின்றிக் காணப்படுவதாகவும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.

கவிஞர் மு. பொன்னம்பலம்: ஈழத்திலிருந்து வருகை தந்த கவிஞர் மு.பொன்னம்பலம் உரையாற்றும்போது இயந்திர வேகத்தில்
புத்தகங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறன என்றும், இன்று எழுதுபவர்கள் மற்றையவர்களின் எழுத்துக்களை படிப்பதே இல்லை என்றும் கவலை தெரிவித்தார். ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் காணப்படும் குண்டுச் சட்டியில் குதிரை ஓடும் மனோபாவம் விசனத்துக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார். ஈழத்து நூல்களின் வாசிப்பு பெருமளவு கவலை தருவதாக இருக்கிறது என்றும், இது போன்ற கண்காட்சிகள் வாசிப்புப்பழக்கத்தை உயர்த்துவதற்கு உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

விமர்சகர் மு. நித்தியானந்தன்: விமர்சகர் மு. நித்தியானந்தன் பேசும்போது முல்லை அமுதனின் அரும்பெரும் முயற்சியினை
பாராட்டினார். தமிழகத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஏழு லட்சம்பேர் கலந்து கொண்டனர் என்றும் ஏழு கோடி ரூபாய்க்கும்
அதிகமான புத்தகங்கள் விற்பனை இடம்பெற்றுள்ளது என்றும் தெரிவித்த அவர் தமிழக மக்கள் மத்தியில் புத்தகம் தொடர்பாகக் காணப்படும் ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது என்றும் குறிப்பிட்டார். ஈழத்தில் ஆண்டுக்கு ஒரு சிறுகதைத்தொகுப்புஇ ஒரு கவிதைத்தொகுப்பு மட்டுமே வெளியான ஒரு சூழலில் இருந்;து இன்று மாதந்தோறும் இரண்டு மூன்று நூல்கள், இலக்கிய ஏடுகள் இலங்கையில் வெளியாகிக்கொண்டிருப்பது உற்சாகம் தருகிறது என்றும் மு. நித்தியானந்தன் தெரிவித்தார். தமிழகத்தின் வாணிப வெளியீட்டு நிறுவனங்களின் பிடிக்குள் புகலிட எழுத்தாளர்களும், ஈழத்து எழுத்தாளர்களும் சிறைப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தரணி செ. சிறிஸ்கந்தராஜா: சட்;டத்தரணி செ.சிறிஸ்கந்தராஜா உரையாற்றும்போது ஆறுகோடி மக்களைக் கொண்ட தமிழ் நாட்டிலும் நூல்களைப் பதிப்பிக்கும்போது ஆயிரம் பிரதிகளையே அச்சிடுகிறார்கள் என்றும் குறைந்தளவு மக்கள் தொகையைக் கொண்ட ஈழத்திலும் அதே தொகை நூல்கள்தான் அச்சிடப்படுகின்றது என்றும் தெரிவித்தார். இது போன்ற நூல் கண்காட்சிகளிலும்கூட இலக்கிய ஆர்வலர்கள் சமூகம் தந்து சிறப்பிக்கும் போக்கு இல்லை என்று குறிப்பிட்டு விசனம் தெரிவித்தார். இன்று நிலைமைகள் போகின்ற போக்கில் வன்னியில்கூட தமிழ் நூல்களைப் பாதுகாப்பது சாத்தியமாகுமா? என்று சந்தேகம் தெரிவித்த அவர் ஈழத்து நூல்களுக்கான நிரந்தரமான நூல் காப்பகம் ஒன்றினை லண்டன் தமிழர்கள் மனம் வைத்தால் நிச்சயமாக அதனைச் செயல்படுத்தலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கரவைக் கவி வீரவாகு: இந்த அரங்கில் உரையாற்றிய கரவைக்கவி வீரவாகு பெற்றோர்கள் தங்கள் வாசிப்புப் பழக்கத்தை தங்கள் பிள்ளைகளுக்கு பழக்கி வரவேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்ச் சமூகம் பல்துறை சார்ந்து தங்கள் சிந்தனையை விஸ்தரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நூலகவியலாளர் என். செல்வராஜா: நூலகவியலாளர் என். செல்வராஜா பேசும்போது தமிழ் மக்களுக்காக தேசிய நூலகம் ஒன்றினை லண்டனில் நிறுவ வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார். லண்டனில் பெரும் நிதிப்பலத்தில் இயங்கிவரும் ஆலயங்கள்கூட நூல் கண்காட்சி நடத்துவதற்கும் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் கட்டணம் அறவிடுவது நியாயமற்றது என்று தெரிவித்தார். கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் நாம் ஒருங்கு திரண்டு இப்பணியில் ஈடுபடவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சுடரொளி ஆசிரியர் ஐ. தி. சம்பந்தன்: சுடரொளி ஆசிரியர் ஐ.தி. சம்பந்தன் பேசும்போது நூல்களை வாசகர் மத்தியில் கொண்டு சேர்ப்பது அவசியமானது என்றும் முல்லை அமுதனின் முயற்சிக்கு தனது ஒத்துழைப்பை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இ. பத்நாப ஐயர்: இ.பத்மநாப ஐயர் பேசும்போது புலம்பெயர் நாடுகளில் மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்ற நிலை வருவதாகக் குறிப்பிட்டார். எமது கலை முயற்சிகளைப் பாதுகாக்க தர்மசிறீ பண்டாரநாயக்கா போhன்ற சிங்களக் கலைஞர்கள் காட்டும் அக்கறை கூட தமிழர்கள் காட்டுவதில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஆசிரியர் எஸ்.வேணுகோபால்: தமிழ் ஆசிரியர் எஸ். வேணுகோபால் உரையாற்றும்போது தமிழ் மொழியை லண்டனில் கல்லூரி மட்டத்தில் பயில்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்று தெரிவித்தார். தமிழ் இலகுபடுத்தப்பட்டு மாணவர்களுக்குப் போதிக்கப்படுவது அவசியம் என்று சுட்டிக் காட்டினார்.

முல்லை அமுதன்: நூல் கண்காட்சியை ஒழுங்கு செய்த முல்லை அமுதன் கூட்டம் முடிவில் ஆற்றிய உரை கூட்டத்தினரது நெஞ்சை உருக்கியதாக அமைந்திருந்தது. இவ்வளவு அரும்பாடுபட்டும் நூல் கண்காட்சிக்கு எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என்று அறியப்பட்டவர்களே வராத நிலைமை விரக்தியையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்துவதாக கவலையோடு தெரிவித்தார். எதற்காக, யாருக்காக இந்த முயற்சிகளை ஏற்படுத்தவேண்டும் என்ற கேள்விகள் தன் நெஞ்சில் எழுகிறது என்றும் கவலை தெரிவித்தார். எனினும் முல்லை அமுதனின் முயற்சிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் ஆதரவு தெரிவித்து எதிர்காலத்தில் அவரது கரங்களைப் பலப்படுத்த
வேண்டும் என்பதே எமது அவாவாகும். பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும, வெற்றுச் சடங்குகளிலும் கலந்துகொள்ளும் நம்மவர்கள் இதுபோன்ற கலை நிகழ்வுகளை புறக்கணிப்பது ஆரோக்கியமானதல்ல.